மகாராஷ்டிராவில் நவ. 7-க்குள் ஆட்சியமைக்காவிட்டால் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு செல்லும் என பாஜகவின் மூத்த தலைவரும் எம்பியுமான சுதிர் முங்கன்திவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதாவுக்கு சிவசேனாவின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியும், 50 சதவிகிதம் அமைச்சர் பதவியும் தரவேண்டும் என சிவசேனா உறுதியாக உள்ளது. ஆனால் இந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ள பாரதிய ஜனதா, தேவேந்திர ஃபட்னாவிஸ் அடுத்த ஐந்து ஆண்டுகளும் முதல்வராக நீடிப்பார் எனக்கூறி வருகிறது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாரதிய ஜனதா மற்றும் சிவசேனவிடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்றும் ஆட்சி அமைப்பது குறித்து பாரதிய ஜனதாவுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நவ. 7 ஆம் தேதிக்குள் ஆட்சியமைக்காவிட்டால் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு செல்லும் என பாஜகவின் மூத்த தலைவரும் எம்பியுமான சுதிர் முங்கன்திவார் தெரிவித்துள்ளார். தீபாவளிக்காக பாஜக - சிவசேனா பேச்சுவார்த்தை தாமதமானது எனவும் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் வரும் எனவும் அவர் தெரிவித்தார்.