சந்திரயான் 2 திட்டம் மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. orbiter, lander மற்றும் rover என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இதனையடுத்து சரியாக 16 நிமிடத்தில் சந்திரயான்-2 விண்கலம், பூமியின் வட்டப் பாதையை சென்றடைந்தது. இதனையடுத்து விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது வரலாற்று முக்கியத்துவமான நாள். இந்த நாள் அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய நாளாகும். விண்வெளி திட்டத்தில் இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பணியாற்றிய அனைத்து பொறியாளர்கள், விஞ்ஞானிகளுக்கும் நன்றி.. இஸ்ரோ இதுபோன்ற புதிய புதிய தொழில்நுட்பங்களை திறம்பட செயல்படுத்த எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஐம்பது நாட்களில் நிலவின் தென்துருவத்தில் இதுவரை இல்லாத அளவு முதல்முறையாக சந்திரயான் 2 தரையிறங்க உள்ளது. இந்த திட்டம் நிலவு குறித்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். சந்திரயான் 2 அனைத்து முயற்சிகளுக்கும் என் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.