இந்தியா

பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் - மணிப்பூர் தாக்குதலுக்கு ராம்நாத் கோவிந்த் கண்டனம்

Sinekadhara

பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என மணிப்பூர் தாக்குதலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் இன்று காலை 10 மணி அளவில் அசாம் ரைபில் 46வது பிரிவின் கட்டளை அதிகாரி தனது  குடும்பத்தினருடன் மயான்மர் எல்லையை ஒட்டிய சுராசந்த்பூர் மாவட்டம் பெஹியாங் காவல் எல்லைக்கு உட்பட்ட செஹ்கன் கிராம் அருகே சென்று கொண்டு இருந்த போது பயங்கரவாதிகள் வைத்த கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி 5 வீரர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.  

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், இது கோழைத்தனமான தாக்குதல்; தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்துவதாக பதிவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தாங்கள் ஒற்றுமையாக நிற்பதாகவும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் மாநில முதலமைச்சர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் ராணுவ வாகனங்கள் மீது நடந்தது கோழைத்தனமான தாக்குதல் எனவும், இவை வேதனை அளிப்பதாகவும், துணிச்சல் மிக்க வீரர்களை நாம் இழந்துள்ளோம் எனவும் மத்திய பாதுகாப்பு தறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதேபோல, மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சர் பீரன் சிங், கோழைத்தனமான தாக்குதலை நிகழ்த்திய குற்றவாளிகளை கண்டிப்பிக்கும் முயற்சியில் ராணுவம் மற்றும் அரசு படைகள் ஈடுபட்டுள்ளது எனவும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் கட்டாயம் நிறுத்தப்படுவார்கள் எனவும் பதிவிட்டுள்ளார். அதேபோல மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மணிப்பூரில் ராணுவ கான்வாய் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கண்டனத்துக்கு உரியது எனவும், 5 வீரர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்து மன வேதனை அளிப்பதாகவும், அவர்களை இழந்து உள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் பதிவிட்டுள்ளார்.