இந்தியா

'விவசாயிகளின் கவலைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்' - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

JustinDurai
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கவலைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தலில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலை பெற உதவும் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் என்பது இந்திய ஜனநாயகத்தின் கோயில் என்றும் மக்களின் நலன் காப்பதில் உள்ள பிரச்னைகளுக்கு முடிவு காணப்பட வேண்டிய இடம் அதுவே என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். பல்வேறு விவகாரங்கள் காரணமாக எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட அமளியால் நாடாளுமன்ற செயல்பாடுகள் பாதிக்கப்பட்ட சூழலில் அதைச் சுட்டிக்காட்டும் வகையில் குடியரசுத் தலைவரின் உரை அமைந்தது.
நாட்டிலிருந்து கொரோனா முற்றிலும் ஒழிந்துவிடவில்லை என்றும் மக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கைவிட்டுவிடக் கூடாது என்றும் குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார்.