நாட்டின் விமானப் படையின் சிறந்த மார்ஷலாக விளங்கிய அர்ஜன் சிங்கின் மறைவு தமக்கு வருத்தமளிப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கேற்ற அர்ஜன் சிங், பின்னர் 1965 ஆம் ஆண்டு யுத்தத்தில் போரிட்டு நாட்டு மக்களின் நன்றியை உரிதாக்கிக் கொண்டார் என அவர் கூறியுள்ளார். சிறந்த சேவைக்காக விமானப் படையின் மார்ஷல் என்ற ஐந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்ற ஒரே அதிகாரி அவர்தான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மார்ஷல் அர்ஜன் சிங் டெல்லியின் துணைநிலை ஆளுநராகவும், சுவிட்சர்லாந்து மற்றும் வாடிக்கனுக்கான இந்தியத் தூதராகவும், கென்யாவுக்கான ஹை கமிஷனராகவும் சேவையாற்றியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள குடியரசுத் தலைவர் அவருக்கு பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.
டெல்லியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அர்ஜன் சிங்கின் உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமரின் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர், முப்படை தளபதிகள், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உள்ளிடோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அர்ஜன் சிங்கிற்கு முழு அரசு மரியாதையுடன் நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. காலை 8:15 மணியளவில் உடல் பீரங்கி வண்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் காலை 9:30 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டுகள் முழங்க போர் விமானங்கள் பறக்க இறுதிசடங்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, டெல்லியில் தேசியக் கொடிகள் அனைத்தும் அரைக் கம்பத்தில் பறக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.