போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்க கூடாது என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பெண்கள் பாதுகாப்பு என்பது ஒரு தீவிரமான பிரச்சினை. பெண்கள் மீதான கொடூரமான தாக்குதல் நாட்டின் மனசாட்சியையே உலுக்குகிறது. கருணை மனுக்களை நாடாளுமன்றமே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
இதனிடையே, நிர்பயா வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி அளித்த கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்த பதில் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.