இந்தியா

டெல்லியில் குடியரசு தினவிழா... கொடியேற்றினார் பிரணாப் முகர்ஜி

டெல்லியில் குடியரசு தினவிழா... கொடியேற்றினார் பிரணாப் முகர்ஜி

Rasus

நாட்டின் 68-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

டெல்லியில் பெய்த மழை காரணமாக குடியரசுத் தின விழா தாமதமாகத் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, அமர் ஜவான் ஜோதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் குடியரசு தின விழா நடைபெறும் ராஜ பாதைக்கு வந்த பிரதமரை, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், முப்படைத் தளபதிகள் வரவேற்றனர். அதனையடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி வருகை புரிந்தார். அவரை, பிரதமர் வரவேற்றார்.

பின்னர், குதிரைப்படை வீரர்கள் சூழ குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினரான அபுதாபி இளவரசர் முகமது பின் ஜியத்தும் ஒரே காரில் வருகை தந்தனர். அவர்களை பிரதமர் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, நாட்டுப்பண் இசைக்க தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றி வைத்தார். பின்னர் மறைந்த ராணுவ வீரர் ஹவில்தார் ஹங்பான் தாதாவுக்கு அறிவிக்கப்பட்ட அசோக் சக்ரா விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி‌ ஏற்றுக்கொண்டார். இதில், முப்படைகளின் வலிமையை உலகத்திற்குப் பறைசாற்றும் வகையில் ராணுவ வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில், முதல்முறையாக ஐக்கிய அரசு அமீரகத்தின் படைப்பிரிவும் பங்கேற்றது.

நாட்டின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் மாநிலங்களின் சார்பில், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், தமிழகத்தின் சார்பில் கரகாட்டக் குழுவினருடனான ஊர்தி பங்கேற்றது.

குடியரசு தின விழாவில், முன்னாள் பிரதமர்கள் தேவ கவுடா, மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பல்வேறு நாடுகளின் தூதர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிடோர் கலந்து கொண்டனர். குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி வேலையில் ஈடுபடக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததை அடுத்து, டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.