இந்தியா

7 பேரை விடுவிப்பதில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் - ஆளுநர் தரப்பு

7 பேரை விடுவிப்பதில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் - ஆளுநர் தரப்பு

Sinekadhara

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளதாக கூறி ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.

இன்று சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் என்று தெரிவித்திருந்தார். திமுக தலைவர் ஸ்டாலினும், ஆளுநர் ஏன் இன்னும் முடிவெடுக்கவில்லை? முதல்வர் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் ஆளுநர் தரப்பு தனது கருத்தை வெளியிட்டுள்ளது. 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருப்பதாக கூறி ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த 25ஆம் தேதி இந்த உத்தரவை ஆளுநர் தரப்பு மத்திய அரசுக்கு அனுப்பியிருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்குபிறகுதான் முதல்வர் பழனிசாமி ஆளுநரை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அதனைத்தொடர்ந்து ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பியிருந்த நிலையில் ஆளுநர் முடிவு வெளிவராமல் இருந்தது. 

இதுகுறித்து மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் முதல்நாளில் குடியரசுத் தலைவருக்கே இந்த வழக்கில் முடிவெடுக்க அதிகாரம் இருப்பதாகக் கூறி, அடுத்த நாளே ஆளுநர் முடிவெப்பார் என்று கூறியிருந்தார்.

உச்ச நீதிமன்றமும் ஒருவார காலத்துக்குள் ஆளுநர் இதுகுறித்து முடிவெடுப்பார் என்று கூறி இந்த வழக்கை ஒத்திவைத்திருந்த நிலையில் தற்போது ஆளுநர் தனது கருத்தை வெளியிட்டு வழக்கை நிராகரித்துள்ளார்.