நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
பிரதமரின் திட்டங்கள் ஏழைப் பெண்களை சென்றடைந்து வருவதாகவும், ஏழைகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை அரசு குறைத்துள்ளதாகவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்துள்ளார்.விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். காந்தியின் 150ஆவது பிறந்தநாளை அடுத்த ஆண்டு கொண்டாடும்போது நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் ராம்நாத் கூறினார்.
நாட்டில் 2.5 லட்சம் கிராமங்களில் இணையதள பிராட்பேண்ட் அலைவரிசை சென்று சேர்ந்திருக்கிறது என்றும் ஏழை பெண்களின் பெயரில் 3 லட்சம் சமையல் எரிவாயு இணைப்பு தரப்பட்டுள்ளது எனவும் கூறினார். அரசின் கொள்கைகள், விவசாயிகளின் கடும் உழைப்பு காரணமாக உணவு தானிய உற்பத்தி 27.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறைந்தக் கட்டணத்தில் அனைவருக்கும் மருத்துவ சேவை அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் சிறுபான்மையினருக்கு அதிகாரமளிக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் 82 சதவிகித கிராமங்களை சாலை வசதிகளின் மூலம் அரசு இணைத்துள்ளது என்றும் 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலியை 40 சதவிகிதமாக அரசு உயர்த்தியுள்ளதாகக் கூறினார். சிறு தொழில்கள் தொடங்க பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் மாநிலங்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்கிறது எனவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.