நாடாளுமன்ற விவகாரம் - குடியரசுத் தலைவர் கண்டனம்
நாடாளுமன்ற விவகாரம் - குடியரசுத் தலைவர் கண்டனம் pt web
இந்தியா

ஜகதீப் தன்கர் போல மிமிக்கிரி - “மனம் நொந்து போனேன்” குடியரசுத் தலைவர் வேதனை!

Angeshwar G

நாடாளுமன்றத்தில் இதுவரை 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையைச் சேர்ந்த 95 எதிர்க்கட்சி உறுப்பினர்களும், மாநிலங்களவையைச் சேர்ந்த 46 எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவை தலைவரான குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கல்யாண் பானர்ஜி கிண்டல் செய்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற வழியாக படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது, கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரைப்போல நடித்து, அவரை கிண்டல் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அதை தங்கள் கைப்பேசிகளில் பதிவுசெய்தனர். பின்னர் இந்த காணொளி வைரலாக பரவி, பல தொலைக்காட்சி செய்திகளிலும் இடம்பெற்றது.

‘இந்த இழிவான செயலை, நான் தொலைக்காட்சியில் கண்டேன்’ எனக்கூறி ஜெகதீப் தங்கர் தானும் கடும் கண்டனம் தெரிவித்தார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர், ’இந்த நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாண்பை குறைக்கும் விதமாக உள்ளது’ என விமர்சனம் செய்தனர். ’இப்படிச் செயல்படுவதால்தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இடைநீக்க நடவடிக்கையை சந்திக்க நேரிடுகிறது’ என பாரதிய ஜனதா கட்சி தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

நாடாளுமன்ற விவகாரம் - குடியரசுத் தலைவர் கண்டனம்

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விஷயத்தில் தான் மனம் நொந்து போனதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் தெரிவித்துள்ள பதிவில், “நாடாளுமன்ற வளாகத்தில் நமது மதிப்பிற்குரிய குடியரசுத் துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களை வெளிப்படுத்த சுதந்திரமாக இருக்க வேண்டும், ஆனால் அவர்களின் வெளிப்பாடு கண்ணியம் மற்றும் மரியாதையின் விதிமுறைகளுக்குள் இருக்க வேண்டும்.

அதுதான் நாங்கள் பெருமைப்படும் பாராளுமன்ற பாரம்பரியம், அதை அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார் குடியரசுத் துணைத் தலைவர். இது குறித்து அவர் தனது x பதிவில், "உங்கள் (குடியரசுத் தலைவர்) அன்பான வார்த்தைகளுக்கும் அடிப்படை மரியாதைகள் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டியதற்கும் நன்றி.

எனது இறுதி மூச்சு வரை அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருக்கிறேன். எந்த அவமானமும் என்னை அவ்வாறு செய்வதைத் தடுக்க முடியாது" என்றார்.