இட ஒதுக்கீட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலை மாநில அரசுகளே தயாரிப்பதற்கு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுகளுக்கு ஓபிசி பட்டியலை மாற்றியமைக்க சட்டத்தில் இடமில்லை என கடந்த மே மாதம் தீர்ப்பளித்திருந்தது. மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தபோதிலும், மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
இந்த நிலையில், இட ஒதுக்கீட்டுக்கான ஓபிசி பட்டியலை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தொடரில் பிற அலுவல்களை புறக்கணித்தாலும், இந்த விவகாரத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து எதிர்க்கட்சிகள் ஒருமனதாக இதற்கான மசோதா நிறைவேற உதவின. மழைக் காலக் கூட்டத் தொடருக்கு பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்த திருத்தம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த அரசியல் சாசன திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதால், ஓபிசி பட்டியலை நிர்ணயம் செய்யும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.