இந்தியா

குடியரசுத் தலைவரும் கருணை மனுக்களும்..!

Rasus

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றுள்ள பிரணாப் முகர்ஜி தமது பதவிக்காலத்தில் அதிகமான கருணை மனுக்களை நிராகரித்த குடியரசு தலைவர்கள் பட்டியலில் ஆர்.வெங்கட்ராமனுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார்.

மரண தண்டனை கைதிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவருக்கு அவர்கள் கருணை மனுக்களை அனுப்புவார்கள். அவர்கள் புரிந்த குற்றங்களின் கடுமையை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை நிராகரிக்கவோ, தண்டனையைக் குறைக்கவோ குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு. அந்த வகையில் மொத்தம் 45 மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை நிராகரித்து முதலிடத்தில் ஆர்.வெங்கட்ராமன் இருக்கிறார். அவர் தமது பதவிக்காலத்தில் 45 கருணை மனுக்களை நிராகரித்தார். 5 கைதிகளுக்கு தண்டனையைக் குறைத்தார்.‌ அவருக்கு அடுத்து 2-வது இடத்தில் பிரணாப் முகர்ஜி, 30 கருணை மனுக்களை நிராகரித்திருக்கிறார். அப்சல்குரு, அஜ்மல் கசாப் ஆகியோரின் மனுக்களும் அதில் அடங்கும். அதேசமயம், 4 மரண தண்டனை கைதிகளுக்கு பிரணாப் தண்டனையை குறைத்திருக்கிறார்.

நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் தான் அதிகபட்சமாக 180 கைதிகளுக்கு தண்டனையைக் குறைத்து கருணை காட்டியிருக்கிறார். ஒரே ஒரு கருணை மனுவை மட்டும் அவர் நிராகரித்திருக்கிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் தமது பதவிக்காலத்தில் 57 கைதிகளுக்கு தண்டனையை குறைத்தார். ஒரு கருணை மனுவைக் கூட அவர் நிராகரிக்கவில்லை. ஜாகீர் உசேன் 22 பேருக்கும், வி.வி.கிரி 3 பேருக்கும் மரண தண்டனையை ரத்து செய்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு கருணை மனுவைக் கூட நிராகரிக்கவில்லை.

பக்ருதீன் அலி அகமது, சஞ்சீவ ரெட்டி ஆகியோர் தமது பதவிக்காலங்களில் கருணை மனுக்களை பரிசீலிக்கவே இல்லை. ஜெயில்சிங் தமது பதவிக்காலத்தில் 2 பேருக்கு தண்டனையை குறைத்து, 30 கருணை மனுக்களை நிராகரித்தார். சங்கர் தயாள் சர்மா தமது பதவிக்காலத்தில் பெற்ற 18 பேரின் கருணை மனுக்களையும் நிராகரித்தார். கே.ஆர்.நாராயணன் தமது பதவிக்காலத்தில் 10 கருணை மனுக்களை பெற்ற போதும் ஒன்றை மட்டும் பரிசீலித்து நிராகரித்தார். அப்துல் கலாம் 25 கருணை மனுக்களை பெற்றிருந்த போதும் 2 மனுக்களை பரிசீலித்து, ஒன்றை மட்டும் நிராகரித்தார். பிரதிபா பாட்டீல் தமது பதவிக்காலத்தில் 5 கருணை மனுக்களை நிராகரித்தார். அதே சமயம், 34 பேருக்கு தண்டனையை குறைத்தார்.