ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக உலகின் மிகப்பெரிய எரிசக்தி மையம் கத்தாரில் தாக்கப்பட்டதால், எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. இந்தியா, கத்தாரிலிருந்து எரிவாயு இறக்குமதி குறைவதால், மேற்கு ஆப்பிரிக்காவில் எரிபொருள் வாங்க திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பிரீமியம் பெட்ரோல் மற்றும் தொழில்துறை எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.
அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்துவிடும், உலகநாடுகளின் எரிபொருள் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 3 வாரங்களை கடந்து நடந்துவரும் இப்போர் மேலும் தீவிரமடைந்துவருகிறது. ஈரான் தொடர்ந்து வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதும், எரிசக்தி மையங்களை குறிவைத்து தகர்த்துவதும் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சமீபத்தில் கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிசக்தி மையத்தை (Ras Laffan) ஈரான் தாக்கிய நிலையில், உற்பத்தி பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் கத்தாரின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி உற்பத்தித் திறனில் 17 விழுக்காடு முற்றிலுமாக அழித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், சேதமடைந்த கட்டமைப்புகளைச் சீரமைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா தனது எரிவாயு தேவையில் 50 சதவீதம் கத்தாரிலிருந்தே இறக்குமதி செய்வதால் எரிபொருள் கிடைப்பதில் பெரிய தாக்கத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது. இதனால் மேற்கு ஆப்பிரிக்காவில் எரிபொருள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தசூழலில் தான் பிரீமியம் பெட்ரோல் மற்றும் தொழில்துறை எரிபொருளின் விலையை இந்தியன் ஆயில் நிறுவனம் உயர்த்தி அறிவித்துள்ளது.
இந்தியாவில் ப்ரீமியம் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ப்ரீமியம் பெட்ரோல் விலையில், லிட்டருக்கு 2 ரூபாய் 9 பைசா முதல் 2 ரூபாய் 35 பைசா வரை உயர்த்தி, ஹெச்.பி.சி.எல், இந்தியன் ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதேவேளையில், சாதாரண பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
ப்ரீமியம் பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து, தொழில்துறை எரிபொருள் விலையை இந்தியன் ஆயில் நிறுவனம் உயர்த்தியுள்ளது. லிட்டருக்கு 21 ரூபாய் 92 பைசா உயர்த்தப்பட்டுள்ளதால், ஒருலிட்டர் தொழில்துறை எரிபொருளின் விலை, 87 ரூபாய் 67 பைசாவிலிருந்து 109 ரூபாய் 56 பைசாவாக உயர்ந்துள்ளது.இது தொழில்துறையில் கடும்தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.