இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா போட்ட ட்விட்டர் பதிவை ரசிகர்கள் ட்ரோல் செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்த நிலையில், சிட்னி டெஸ்ட் போட்டி மழையால் கடைசி நாளில் கைவிடப்பட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையிலே இருந்தது.
இந்திய அணிக்கு இது ஒரு சாதனை வெற்றியாகும். கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. சுமார் 71 ஆண்டுகால தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய கேப்டன் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.
இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஒரு ட்விட்டர் பதிவிட்டார். அதில், டெஸ்ட் தொடருக்கு பதிலாக டெஸ்ட் போட்டி என்று பதிவிட்டுவிட்டார். இதனைக் கண்ட ரசிகர்கள் பொங்கி எழுந்துவிட்டனர். ப்ரீத்தி ஜிந்தாவின் அந்த ட்விட்டர் பதிவினை கடுமையாக ட்ரோல் செய்தனர்.
இதனையடுத்து, தன்னுடைய ட்விட்டர் பதிவு ட்ரோல் ஆவதை அறிந்த ப்ரீத்தி அதனை நீக்கிவிட்டார். ஆனால், அதற்குள் நிறையபேர் அதனை பார்த்து கருத்து பதிவிட்டுவிட்டனர்.