எஸ்.ஐ.ஆர். (SIR) விவகாரத்தைத் தொடர்ந்து பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2025-ஆம் ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (JDU) மற்றும் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) ஆகிய பாரம்பரிய கட்சிகளுக்கு மாற்று அரசியல் சக்தியாக உருவெடுத்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி மாநிலம் முழுவதும் தீவிரமாக களமிறங்கினாலும், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. இக் கட்சி 3.34 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்ததுடன், தான் போட்டியிட்ட 238 தொகுதிகளில், 2 தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்திருந்தது.
இத்தேர்தல் தோல்விக்கு மிகமுக்கியக் காரணங்களில் ஒன்றாக ஜன்சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடாததே என பரவலாக கூறப்பட்டது. இந்தப் பின்னணியின் தான், வரும் ஜூலை 30-ம் தேதி பாங்கிப்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாந்த் கிஷோரை ஜன் சுராஜ் கட்சியின் தலைமை அறிவித்திருக்கிறது.
பிகாரில் பாஜகவின் கோட்டைகளில் ஒன்றான பாங்கிபூர், கடந்த 2006 முதல் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த தொகுதியாகும். அவர், இந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானதைத் தொடர்ந்து, தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு, ஜூலை 30-ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தசூழலில் தான், இந்த இடைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளின் வெற்றிகளுக்கு வியூகங்களை வகுத்த பிரசாந்த் கிஷோர் முதல்முறையாக போட்டியிடவிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியுள்ள பிரசாந்த் கிஷோர், "இது ஒரு சாதாரண இடைத்தேர்தல் அல்ல. பிகாரில் பாஜக தலைமையிலான அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பாக இந்தத் தேர்தல் அமையும்" என்று தெரிவித்தார். மேலும், பாங்கிப்பூர் தொகுதியில் உள்ள சுமார் 4 லட்சம் வாக்காளர்களும் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் மூலம், தேர்தல் வியூக நிபுணராக இருந்து நேரடி அரசியல்வாதியாக மாறியுள்ள பிரசாந்த் கிஷோரின் மக்கள் செல்வாக்கை அளவிடும் முதல் பெரிய அரசியல் சோதனையாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.