பீகார் மாநிலத்தில் கடந்த 13ஆம் தேதி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட மையங்களில் ஏறக்குறைய ஐந்து லட்சம் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுதினர். இதில், பாட்னாவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில், வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி நூற்றுக்கணக்கான தேர்வர்கள் தேர்வைப் புறக்கணித்தனர். இந்தத் தேர்வில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தேர்வு முறைகேட்டைக் கண்டித்து பாட்னாவில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், 10,000க்கும் மேற்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு மறு தேர்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. ஆனாலும் இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பிரபல தேர்தல் வியூகருமான, ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனமான பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், போராடத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முறைகேட்டைக் கண்டித்து, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் திரண்டிருந்த மாணவர்கள், முதல்வர் நிதிஷ்குமார் இல்லம் நோக்கி பேரணியாகச் செல்லத் திட்டமிட்டனர்.
மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு பிரசாந்த் கிஷோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். இதற்கிடையே, அனுமதியின்றி கூடியதாகவும் மாணவர்களை கலைந்து செல்லுமாறும் போலீசார் கூறினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கிடையே அனுமதியின்றி கூடியதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த பிரசாந்த் கிஷோருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மாணவர்களிடம் பேச உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக மாணவர்கள் மத்தியில் பேசிய பிரசாந்த் கிஷோர், ”தேர்வர்கள் விவகாரத்தை தன்மான பிரச்னையாக அரசு பார்க்கிறது. காந்தி மைதானம் ஒரு பொதுவான இடம். மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளதைப் பேச உரிமையில்லையா?. நாங்கள் என்ன குற்றவாளிகளா?
எந்த நாசவேலையும் நடக்கவில்லை. எந்த விஐபி வாகனங்களும் தடுக்கப்படவில்லை. எங்கள் போராட்டத்தால் எந்தப் பொது நிகழ்ச்சியும் பாதிக்கப்படவில்லை. மாறாக, பல போலீஸ் அதிகாரிகள் அத்துமீறிச் சென்றதாக நாங்கள் நம்புகிறோம். அவர்கள் மீது நாங்கள் நீதிமன்றத்தில் புகார் அளிப்போம். பீகாரில் இதுபோன்ற அவலநிலையே உள்ளது. ஏனெனில், எந்தப் பொறுப்பும் இல்லாதவர்களாலேயே மாநில ஆட்சி நடைபெறுகிறது.
முதல்வர் நிதிஷ்குமார், அரசியல் தலைவர்களைப்போல மக்கள் பிரச்னைகளுக்குப் பொறுப்பேற்காமல் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் கூட்டத்திடம் அனைத்தையும் ஒப்படைத்துள்ளார். பிபிஎஸ்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நான் கேள்விப்பட்ட அவதூறான குற்றச்சாட்டை மேலும் வைக்க விரும்பவில்லை. தலைமைச் செயலாளர் உறுதியளித்ததைத் தொடர்ந்து சாதகமான முடிவை எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொது செயலாளரும், எம்பியுமான பிரியங்கா காந்தி இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘‘இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்படுவது கொடுமையின் உச்சமாகும். பாஜ ஆட்சியில் வேலைவாய்ப்பு கோரிய இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்படுகின்றது. உத்தரப்பிரதேசமாக இருந்தாலும் சரி, பீகார் அல்லது மத்தியப்பிரதேசமாக இருந்தாலும் இளைஞர்கள் குரல் எழுப்பினால் அவர்கள் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுயேச்சை எம்பி ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ், பிபிஎஸ்சி விவகாரத்தில் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் தலையிடுவதாக உறுதியளித்தார். மேலும், மாணவர்களின் போராட்டத்தைத் தூண்டிவிட்ட பிரசாந்த் கிஷோரை ஒரு மோசடி எனக் குறிப்பிட்டுள்ளார்.