இந்தியா

பஞ்சாப் முதல்வரின் முதன்மை அரசியல் ஆலோசகர் பதவியிலிருந்து பிரஷாந்த் கிஷோர் ராஜினாமா

PT WEB

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் முதன்மை அரசியல் ஆலோசகர் பதவியை, பிரபல தேர்தல் வியூக வல்லுநரான பிரஷாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரஷாந்த் கிஷோர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர்  அமரீந்தர் சிங்கிற்கும், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், பிரஷாந்த் கிஷோரின் ராஜினாமா பஞ்சாப் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் முதல்வர்  அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த பிரசாந்த் கிஷோருக்கு மாதம் ஒரு ரூபாய் என்ற அளவில் கெளரவ சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2017-ல் நடந்த தேர்தலில்  அமரீந்தர் சிங்கிற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் பணியை பிரஷாந்த் கிஷோர் மேற்கொண்டிருந்தார். இதில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அண்மையில் தமிழகம், மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல்களில் தி.மு.க, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்தார். இரு கட்சிகளும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தன. இதன் பிறகு தேர்தல் வியூகப் பணிகளை இனிமேல் மேற்கொள்ளப்போவதில்லை என்று பிரஷாந்த் கிஷோர் அறிவித்திருந்தார்.

பிரஷாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம்தான. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து கொடுக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அளவில் முக்கிய கட்சிகளின் சமூக ஊடகங்களை கையாளுதல் மற்றும் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தல் போன்றவற்றால் பிரபலமானவர் பிரஷாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.