அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் கிஷோர் x page
இந்தியா

டெல்லி | ஆம் ஆத்மி தோல்வி.. காரணம் குறித்து விளக்கிய பிரசாந்த் கிஷோர்!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியைச் சந்தித்தது குறித்து ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், பிரபல தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்

Prakash J

தலைநகர் டெல்லிக்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் அபார வெற்றிபெற்று அரியணை ஏற இருக்கிறது. ஆம் ஆத்மி 22 இடங்களில் வென்ற நிலையில், ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸுடன் கூட்டணி இல்லாதது, புதிய மதுபானக் கொள்கை ஊழல், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆடம்பர பங்களா, வடகிழக்கு டெல்லி கலவரம், அடிப்படை வசதிகள் செய்யாதது, யமுனை நீர் பற்றிய பேச்சு உள்ளிட்டவை காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையில் ஆம் ஆத்மியின் தோல்வி குறித்து ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், பிரபல தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவால் செய்துவந்த எதிர்ப்பு அரசியல் ஆம்ஆத்மி கட்சியின் தோல்விக்கு முதல் காரணமாகும். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால், முதல்வர் பதவியில் இருந்து விலகியது 2வது காரணமாக பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பு முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்டு, வேறு ஒருவரை முதல்வராக நியமித்தது மிகப்பெரிய தவறான முடிவாகும். மேலும் சமீபகாலமாக கெஜ்ரிவால் எடுத்து வந்த அரசியல் நிலைப்பாடும் தோல்விக்கு காரணமாகும். i-n-d-i-a கூட்டணியில் இணைந்துவிட்டு, பிறகு டெல்லி சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால், அவரால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆம்ஆத்மி, ஆட்சி நிர்வாகத்தில் தோல்வியடைந்தது. எனவே இப்போதைய சூழலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கு பெறுவது மிகவும் கடினமான விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.