சிஏஏவுக்கு எதிராக காட்டமாக பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ்
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமான கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.
கடந்த திங்கட்கிழமை அவர் பேசும்போது “பிரமர் நரேந்திர மோடிக்கு இந்திய இளைஞர்கள் சரியான அரசியல் பாடத்தை கற்றுக் கொடுத்து அதில் பட்டம் பெற வைப்பார்கள்.” என்றார். மேலும் இந்த தேசத்திற்கு தேவை 3000 கோடி ரூபாய்க்கு சிலை அல்ல என சர்தார் வல்லபாய் படேலின் சிலையை மறைமுகமாக குறிப்பிட்டு பேசிய அவர், தேசிய குடிமக்கள் பதிவேட்டினை தயாரிப்பதை விட வேலையின்றி தவிக்கும் இந்திய இளைஞர்களின் பட்டியல் மற்றும் அடிப்படை கல்வியறிவு கூட பெறாத குழந்தைகளின் பட்டியலை தயார் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.
என்பிஆர் மற்றும் சிஏஏவிற்கு எதிராக போராடுகிறவர்கள் மீது அரசாங்கம் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது என்றாலும் போராட்டக்காரர்கள் வன்முறையினை தவிர்த்து அறவழியிலேயே போராட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“அஸ்ஸாமில் உள்ள 19 லட்சம் பேரின் இந்தியக் குடியுரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அதில் கார்கில் யுத்தத்தில் இந்தியாவிற்காக போரிட்ட ராணுவ வீரரும் அடக்கம். அவர் முஸ்லிம் என்பதால் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டிருக்கிறது” என்றும் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார்.