bengaluru cjp protest ANI
இந்தியா

'மோடிக்கு எதிராக நாடே இருக்கிறது..' பெங்களூருவில் திரண்ட துருவ் ராட்டி, பிரகாஷ் ராஜ்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில், யூடியூபர் துருவ் ராட்டி, நடிகரும் சமூகச் செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள மூன்று தேர்தல் ஆணையர்களில் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், கடந்த 10 மாதங்களில் பல்வேறு முடிவுகள் தொடர்பாக குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்சேபனைகள் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பானதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் பெயரில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் தங்களது அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்டதாக இரு தேர்தல் ஆணையர்களும் ஆட்சேபனை தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

PRAKASH RAJ

ஆனால், தேர்தல் ஆணையம் இதனை மறுத்துள்ளது. SIR உள்ளிட்ட முக்கிய முடிவுகள் மூன்று தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலுடனும் ஒருமனதாகவும் எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியக் கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில், யூடியூபர் துருவ் ராட்டி, நடிகரும் சமூகச் செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெங்களூருவில் உள்ள ஃப்ரீடம் பூங்காவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை, ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’யின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தலைமையிலான அமைப்பினர் முன்னெடுத்தனர். SIR நடவடிக்கையால் வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், தங்களது குறைகளை முன்வைக்கும் வகையில் ‘பீப்பிள்ஸ் டிரிபியூனல்’ என்ற நிகழ்வும் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரபல யூடியூபர் துருவ் ராட்டி, “நான் ஆட்சி மாற்றத்திற்காக இங்கு வரவில்லை” எனக் கூறியதுடன், “மோடிக்கு என்னுடன் பிரச்னை இருப்பதாக அவர் நினைக்கலாம்; ஆனால், ஒட்டுமொத்த நாட்டுக்கே அவருடன் பிரச்னை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் ஆணையத்திடம் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் இல்லை எனக் குற்றம்சாட்டிய அவர், இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் எனக் கூறினார்.

ABHIJITH DEEPKE

இதைத்தொடர்ந்து பேசிய பிரகாஷ் ராஜ், “வாக்குகளை எடுத்துக்கொள்ள அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” எனக் கேள்வி எழுப்பினார். SIR என்பது வெறும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கும் நடவடிக்கை மட்டுமல்ல; அது மக்களின் வாக்குரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதிக்கும் நடவடிக்கை என அவர் குற்றம்சாட்டினார். மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகுவது மட்டுமே பிரச்னைக்குத் தீர்வாகாது என்றும், முதலில் SIR நடவடிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் வலியுறுத்தினார்.

இதனிடையே, போராட்டத்தில் பேசிய அபிஜீத் தீப்கே, SIR மூலம் ஜனநாயகம் பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.