இந்தியா

தலித் அமைப்புகள் இணைந்து எதிர்க்கவேண்டும்: பிரகாஷ் அம்பேத்கர்

தலித் அமைப்புகள் இணைந்து எதிர்க்கவேண்டும்: பிரகாஷ் அம்பேத்கர்

webteam

மாடுகளை விற்கத் தடை என்னும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து, தலித் அமைப்புகள் மற்றும் தலித் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என டாக்டர் அம்பேத்கரின் பேரனும், பரிபா பகுஜன் மகாசங்க கட்சியின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள பாலபூரி விருந்தினர் மாளிகையில், நாடு முழுவதுமுள்ள தலித் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரகாஷ் அம்பேத்கர், இந்திய குடியரசு கட்சி, பகுஜன் சமாஜ், தலித் சங்கர சமிதி உட்பட 50-க்கும் மேற்பட்ட தலித் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரகாஷ் அம்பேத்கர், 'இந்தியாவின் மத சார்பின்மையையும், சமூக நீதியையும், சமத்துவத்தையும் பாஜக அரசு அழித்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவில் உள்ள அனைத்து தலித் அமைப்புகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது. மொழியை மறந்து, மாநில‌ எல்லைகளை கடந்து, உட்சாதி முரண்களை துறந்து, தலித் என்ற ஒற்றை அடையாளத்தில் இணைய வேண்டும். காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளில் இருக்கும் தலித் மக்கள் அக்கட்சியை விட்டு வெளியேற வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் இருக்கும் அனைத்து தலித் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட வேண்டும்' என்று கூறினார்.