முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும் கர்நாடகாவில் ஹசன் தொகுதி பாஜக கூட்டணி கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற வீடியோக்கள் தேர்தல் நாளுக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் பரவின. இது தொடர்பாக பெண்கள் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இவ்விவகாரத்தில் பிரஜ்வல் மீதும் அவரது தந்தை ரேவண்ணா மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து பிரஜ்வலை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என மதசார்பற்ற ஜனதா தள தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் பிரிஜ்வலின் செயலைக் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். ஏப்ரல் 28 ஆம் தேதி பிரஜ்வாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. போராட்டத்துடன் தொடர்புடைய ரூபா ஹாசன், “விசாரணையை தாமதப்படுத்த அரசு எஸ்ஐடி விசாரணையை ஒரு சாதகமாக பயன்படுத்தக்கூடாது. இந்த வழக்கை நீதிமன்றங்கள் கண்காணிக்க வேண்டும் என விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் சாதிப்பதையும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்ய தவறவில்லை. அதேசமயத்தில் இந்த விவகாரம் பாஜகவிற்கு ஏற்கெனவே தெரியும் என்றும் ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில் எக்ஸ் சமூக தளத்தில் பிரியங்கா காந்தி பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், பிரஜ்வல் ரேவண்ணா நூற்றுக்கணக்கான பெண்களை இழிவுசெய்து இதயத்தை நொறுங்கச்செய்வதாக கூறியுள்ளார். பிரதமருடன் தோளோடு தோள் நின்று பரப்புரையில் ஈடுபட்ட பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி பதில் ஏதும் கூறாமல் பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன் என்றும் பிரியங்கா வினவியுள்ளார். இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்ப பாரதிய ஜனதா உதவியதாக கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.