பிரபுல் பட்டேல், சரத் பவார்
பிரபுல் பட்டேல், சரத் பவார் ani
இந்தியா

மகாராஷ்டிரா அரசியல்: அஜித் பவார் ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கிய சரத் பவார்!

Prakash J

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அக்கட்சியிலிருந்து வெளியேறிய அஜித் பவார், நேற்று (ஜூலை 2) அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வராகப் பதவியேற்றார். மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 29 பேரில் 8 பேருக்கு அமைச்சர் பதவியையும் வாங்கிக் கொடுத்தார்.

அஜித் பவார்

தவிர, அஜித்பவாருடன் தேசியவாத காங்கிரசின் செயல்தலைவர் பிரபுல் பட்டேல், கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான சுனில் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களும் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அஜித் பவார் மற்றும் 8 அமைச்சர்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று கோரி மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி தரப்பில் மனு கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதோடு தேர்தல் கமிஷனுக்கு சரத் பவார் தரப்பில் கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்தக் கடிதத்தில், ’தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவார் தொடர்ந்து தலைவராக இருப்பார். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. அஜித் பவார் தரப்பில் ஏதாவது தகவல் வந்தால் தங்களிடம் கேட்கும் முன்பு அதன்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபுல் பட்டேல், அஜித் பவார்

இந்த நிலையில், பிரபுல் பட்டேல், சுனில் தாக்கரே ஆகியோரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சரத்பவார் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சரத் பவார், “கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் பிரபுல் பட்டேல், சுனில் தாக்கரே ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரித்துள்ளார்.