இந்தியா

பெங்களூர்: சாலைப் பள்ளங்களால் விபத்து: அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

Veeramani

பெங்களூரு நகரத்தில் உள்ள பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக, சாலைகளில் உள்ள பள்ளங்களை சீர் செய்யாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது போக்குவரத்து காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து பேசிய போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் பி.ஆர்.ரவிகந்தே கவுடா, "புலிகேசி நகர் போக்குவரத்து போலீஸ் எல்லைக்குள் அதிகாரியின் அலட்சியத்தால் உயிர் இழப்பு ஏற்பட்டதால், பெங்களூரு மாநகர அதிகாரி மீது நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாகவும் ஒரு அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது"என்று அவர் கூறினார்.

மேலும், "சாலைகளில் உள்ள பள்ளங்களை அடையாளம் கண்டு, அதனால் ஏற்படும் இறப்புகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும்  காயங்களை தவிர்க்கவும், சுமூகமான வாகன இயக்கத்தை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காவல்துறை அறிவுறுத்துகிறது" என்று அவர் கூறினார்.

பெரிய, சிறிய மற்றும் குறுக்கு சாலைகளாக வகைப்படுத்தப்பட்ட சாலைகளில் உள்ள பள்ளங்களின் புகைப்படங்களை போலீசார் எடுத்து வருகின்றனர். இவை பெங்களூரு மாநகராட்சி, பொதுப்பணித்துறை  மற்றும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் போன்ற அமைப்புகளின் இணையத்தில் புகைப்படங்களுடன் பதிவேற்றப்படும், இதனை சீர்செய்யவேண்டியது குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். பள்ளங்கள் நிரப்பப்பட்டால், அது நிச்சயமாக விபத்துக்களைக் குறைக்கும். பெங்களூரு போக்குவரத்து போலீசார் இதுவரை 500 பள்ளங்களை நிரப்பியுள்ளனர் என்று போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.