இந்தியா

கேரளாவில் நெகிழ்ச்சி: மசூதியில் உடற்கூராய்வு, பேருந்து நிலையத்தில் தொழுகை

கேரளாவில் நெகிழ்ச்சி: மசூதியில் உடற்கூராய்வு, பேருந்து நிலையத்தில் தொழுகை

webteam

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு, மசூதியில் நடத்தப்பட்டதால், இஸ்லாமியர்கள் பேருந்து நிலையத்தில் தொழுகை நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.  மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. 

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலப்பரா பொத்துக்கல்லுவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்கும்பணி நடந்து வந்தது. மீட்கப்பட்ட உடல்களை, அங்கிருந்து நீலாம்பூர் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருந்தனர். அது, அங்கிருந்து 40 கி.மீ தூரத்தில் இருப்பதால், அதிக நேரம் ஆகும் என்று கருதப்பட்டது. உடல்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததால், அதை அங்கு கொண்டு சென்று உடற்கூராய்வு செய்வது சிக்கல் என்றும் கருதப்பட்டது. 

இதையடுத்து அங்கேயே பெரிய ஹால் கிடைத்தால் உடற்கூராய்வு செய்து அடக்கம் செய்யலாம் என மருத்துவ அதிகாரிகள் கருதினர். இதைக் கேள்விபட்ட உள்ளூர் மஜித் அல் முஜாஹிதின் கமிட்டி என்ற இஸ்லாமிய அமைப்பு, உடற்கூராய்வுக்கு மசூதியை வழங்க முன் வந்தனர். அவர்கள் மசூதி ஹாலை வழங்கியதை அடுத்து அங்கு உடற்கூராய்வு நடத்தப்பட்டது. இதனால், நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கமாக நடத்தப்படும் தொழுகையை, இஸ்லாமியர்கள் உள்ளூர் பேருந்து நிலையத்தில் நடத்தினர். இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.

இந்த தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து இந்த செய்தி வெளியே தெரிய வந்துள்ளது.