சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேரள மாநில அரசுப் பேருந்தில் பயணம் செய்கிறார்.
கேரளாவில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது. இதனையடுத்து மண்டல பூஜைக்காக சபரிமலை நடை தற்போது திறக்கப்பட்டுள்ளது. எனவே தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். போலீசாரின் கிடுக்குப்பிடியால் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் சிரமம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் சபரிமலை செல்வதற்காக இருமுடி கட்டியுள்ளார். கோயில் செல்ல நிலக்கல் சென்ற அவர் பம்பை செல்ல முயற்சித்துள்ளார். அப்போது பம்பைக்கு அமைச்சர் வண்டியை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவருடன் வருபவர்கள் கேரள அரசின் பேருந்தில் தான் பம்பைக்கு செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்துவிட்டனர். இதனால் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்தவர்கள் போலீசாருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, கேரள அரசு தேவையற்ற சிரமங்களை பக்தர்களுக்கு ஏற்படுத்துவதாக கூறினார். அரசு வாகனங்களை மட்டுமே பம்பைக்கு அனுமதிப்போம் என போலீசார் கடுமையாக நடந்துகொள்ள கூடாது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து அரசு பேருந்தில் செல்ல முடிவு செய்த பொன்.ராதாகிருஷ்ணன், பம்பைக்கு தன் வண்டியில் செல்லாமல் அரசு பேருந்தில் செல்கிறார்.
போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அரசு வாகனங்களை மட்டுமே அனுமதிப்போம் எனக் கூறிக்கொண்டு தனியார் வாகனங்கனை ஏன் பம்பைக்கு அனுப்புகிறீர்கள் என எஸ்.பி-யிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். அதற்கு, தனியார் வாகனங்கள் பம்பையில் பார்க் செய்யப்படாது. பக்தர்களை இறக்கிவிட்டு வந்துவிடும் என எஸ்.பி பதிலளித்தார். ஒருவேளை பம்பையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அமைச்சர் பொறுப்பு ஏற்றுக்கொள்வாரா என்றும் எஸ்.பி கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.