துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. இதில் 191 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து நேரிட்டது எனவும் ஒரு விமானி உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில், “கரிபூரில் உள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் மருத்துவ உதவிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், “கேரளாவில் விமானம் விபத்திற்குள்ளான செய்தி அறிந்து மிகவும் மனவேதனையடைந்தேன். தேசிய பேரிடர் மீட்புக் குழுவை விரைந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் “விமான விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.