protest
protest file image
இந்தியா

தெலங்கானா: போலீஸின் தலைமுடியை பிடித்து இழுத்த பெண்கள்.. கலவர பூமியாக மாறிய கலெக்டர் அலுவலகம்

PT WEB

தெலங்கானா மாநிலத்தில் அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். காலி இடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வுக்கு பிறகு அளிக்கப்படும் ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும், சம்பள உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகள் அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் அடிலாபாட் மாவட்டத்தில் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மாத ஊதியத்தை, குறைந்தபட்சம் 26,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முற்பட்டனர். அப்போது அங்கிருந்த பெண் போலீஸ் எஸ்.ஐ, போராட்டக்காரர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், பெண் எஸ்.ஐ-ன் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றனர். தொடர்ந்து, உடனடியாக தனது தலைமுடியை அள்ளி முடிந்த பெண் எஸ்.ஐ, மற்ற காவலர்களின் உதவியுடன் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினார்.

இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. பணி ஓய்வின் போது ஆசிரியர்களுக்கு ரூ. 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ 5 லட்சமும் ஓய்வூதியமாக கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.