டெல்லி அருகேயுள்ள ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் இருந்து 350 கிலோகிராம் வெடிமருந்துகளையும், ஆயுதங்களையும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் பறிமுதல் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-ஏ-முகமது தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியதாக டாக்டர் ஆதில் அகமது என்பவரை ஜம்மு-காஷ்மீர் காவல் துறை கைதுசெய்தது. ஆனந்த் நாக் மருத்துவமனையில் முன்பு பணியாற்றிய ஆதில் அகமதின் லாக்கரில் இருந்து AK-47 துப்பாக்கி ஒன்றும் பிடிபட்டது.
ஆதில் அகமதிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ஹரியானா காவல் துறை மற்றும் மத்திய உளவுத் துறை ஆகியவை இணைந்து ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சோதனை நடத்தின. அங்கு, ஆதிலின் கூட்டாளியான மருத்துவர் ஷகீல் அகமது பிடிபட்டார். அங்கு, பல பெட்டிகள் மற்றும் பக்கெட்டுகளில் பதுக்கப்பட்டிருந்த 350 கிலோகிராம் அம்மோனியம் நைட்ரேட் ரக வெடிபொருட்கள், இரண்டு AK-47 ரக துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி, மற்றும் வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் டைமர் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வளவு பெரிய வெடிபொருள் கையிருப்பு, டெல்லிக்கு மிக அருகில் உள்ள ஃபரிதாபாத்தில் பிடிபட்டது, பெரிய நாசவேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டதைக் காட்டுவதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.