இந்தியா

சபரிமலை செல்லும் திருப்தி தேசாய்க்கு பாதுகாப்பு தர முடியாது: காவல்துறை ஆணையர் அறிவிப்பு

jagadeesh

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் திருப்தி தேசாய் மற்றும் அவரின் குழுவினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாது என்று கொச்சி மாநகர காவல் துறை கூடுதல் ஆணையர் கே.பி.பிலிப் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக மும்பையில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு இன்று வந்தடைந்தார் பெண்ணிய செயற்பாட்டாளரான திருப்தி தேசாய். கடந்தாண்டு மும்பையில் இருந்து வந்து சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்ணிய செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் பக்தர்கள் போராட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டார். இப்போது இந்தாண்டும் அதே திருப்தி தேசாய், சபரிமலை கோயில் செல்வதற்காக மும்பையில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அப்போது பேட்டியளித்த அவர் " இன்று அரசியலைப்பு நாள். இந்நாளில் சபரிமலை செல்ல அனுமதி மறுக்கப்பட்டால், நிச்சயம் நீதிமன்றம் செல்வேன். அதற்கு கேரள முதல்வரும், பாதுகாப்பு தர மறுத்த டிஜிபியும் பதிலளிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொச்சி மாநகர காவல்துறை ஆணையர் கே.பி.பிலிப் செய்தியாளர்களிடம் கூறுகையில் " திருப்தி தேசாயிடம் சபரிமலை செல்லும் உங்கள் குழுவினருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தெளிவாக தெரிவித்துவிட்டோம். ஆனாலும், அவர் பாதுகாப்பு இல்லை என்றாலும் நாங்கள் சபரிமலை கோயிலுக்கு செல்வோம் என தெரிவித்தார். திருப்தி தேசாய்க்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்த பின்பே, காவல்துறை முடிவெடுத்துள்ளது" என கூறினார்.