இந்தியா

ஹெல்மட் விதிகளை மீறியதாக சக போலீஸுக்கே அபராதம் விதித்த போலீஸ்! - நடந்தது என்ன?

Sinekadhara

ஹெல்மட் விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற போலீஸுக்கு அபராதம் விதித்துள்ளார் மற்றொரு போலீஸ். இந்த புகைப்படம் இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.

பெங்களூருவின் ஆர்.டி நகர் பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற போலீஸ் ஒருவர் அரை ஹெல்மட் அணிந்து சென்றுள்ளார். நகரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அந்த ஹெல்மட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த போலீஸை மறித்த பணியிலிருந்த மற்றொரு போக்குவரத்து போலீஸ் அவருக்கு அபராதம் விதித்துள்ளார். மேலும் அவர்மீது ஹெல்மட் விதிகளை மீறிய குற்றத்திற்காக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

அந்த புகைப்படம் இணையங்களில் வைரலானதை அடுத்து, ஆர்.டி நகர் போலீசாரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். மேலும், ‘’குட் ஈவினிங். போலீஸுக்கு எதிராக அரை ஹெல்மட் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று நிறைய போலீசார் பைக்குகளில் செல்வதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறிவருகின்றனர். சிலர், அந்த போலீஸ் சிரித்துக்கொண்டு இருப்பதால், போட்டோ எடுக்க சித்தரிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.