ஜார்க்கண்ட்டில் தப்ரீஸ் அன்சாரி உயிரிழப்பில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரின் குற்றப்பத்திரிகையை போலீசார் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட்டில் தப்ரீஸ் அன்சாரி என்ற 25 இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெய்ஸ்ரீராம் எனக்கூறி அந்த இளைஞர் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. ரத்தக் கறைகள் படிய வலம் வந்த அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
மேலும் காயங்களுடன் முதலில் தப்ரீஸ் அன்சாரி சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர்தான் காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அன்சாரியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த விவகாரத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 11 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் அவர்களின் குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றப்பத்திரிகையை போலீசார் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தப்ரீஸ் அன்சாரியின் உடற்கூராய்வு அறிக்கையின்படி அவர் மாரடைப்பில் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த விசாரணை அதிகாரி நாராயண், தப்ரீஸ் அன்சாரியின் உடற்கூராய்வு அறிக்கை அவர் மாரடைப்பில் இறந்ததாக கூறுகிறது. நாங்கள் இரண்டு மருத்துவர்களிடம் இதனை உறுதி செய்தோம். மருத்துவ அறிக்கை வெளிவந்த பிறகும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது கொலைக்குற்றத்தை சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய தப்ரீஸ் அன்சாரி குடும்பத்தினரின் தரப்பு வழக்கறிஞர் அல்டாப் ஹூசைன், '' மருத்துவ அறிக்கையின்படி அன்சாரி மாரடைப்பில் இறந்ததாக தெரிவிக்கின்றனர். அப்படி என்றால் தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டது எப்படி? குற்றவாளிகளை போலீசார் காப்பாற்ற நினைக்கின்றனர். நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகுவோம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.