இந்தியா

காஷ்மீர் படுகொலைகளுடன் பசு பாதுகாவலர்களை ஒப்பிடுவதா? - சாய் பல்லவி மீது போலீசில் புகார்

சங்கீதா

காஷ்மீரி தீவிரவாதிகளுடன், பசு பாதுகாவலர்களை ஒப்பிட்டு பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கைக் கோரி காவல்நிலையத்தில் பஜ்ரங் தள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரான ராணா டகுபதியின் ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ள ‘விரத பர்வம்’ திரைப்படம், நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வேணு உடுகுலா இயக்கியுள்ள இந்தப் படத்தில் காதல் மற்றும் நக்சலைட் வாழ்க்கை ஆகியவற்றை மையக் கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிரியா மணி, நந்திதா தாஸ், ஈஸ்வரி ராவ், நிவேதா பெத்துராஜ், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் பட புரமோஷனுக்காக யூட்யூப் ஒன்றில் சாய் பல்லவி கலந்துகொண்டார். அப்போது அவரிடம், நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இடதுசாரி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் நடுநிலையானவள் என்றும், காஷ்மீரில் இந்து பண்டிட்டுகள் கொல்லப்பட்டதற்கும், பசுவை கொண்டு சென்றதற்காக இஸ்லாமியரை தாக்கியதற்கும் என்ன வித்தியாசம் எனவும் இரண்டுமே வன்முறை சம்பவம் தான் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இந்த விவாகாரம் சர்ச்சையை கிளப்பியநிலையில், தற்போது சாய்பல்லவி மீது நடவடிக்கைக் கோரி ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசுவ இந்து பரிசத் இயக்கத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். பசு பாதுகாவலர்களையும், காஷ்மீரி தீவிரவாதிகளையும் ஒப்பிட்டு பேசியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறுவதையும், நாட்டில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளையும் ஒப்பிட்டு பேட்டியின் போது நடிகை சாய் பல்லவி பேசியதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹைதராபாத்தில் உள்ள சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த அகில் புதன்கிழமை புகார் அளித்தார். மேலும், இயக்குநர் வேணு உடுகுலா மீதும் நடவடிக்கைக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தப் புகாரின் மீது காவல்துறையினர் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.