கேரளாவில் குற்றவாளி பிடிக்க சென்ற புதுச்சேரி காவல்துறையினரை தாக்கி,வாகனத்தை சேதப்படுத்தி குற்றவாளியை மீட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது
கேரளாவை சேர்ந்த பினு மற்றும் அவரது சகோதரர்கள் சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி சேர்ந்த வினித் ஜெலன் என்பவரிடம் இருந்து 38 லட்சம் மதிப்பிலான பேக்கேஜிங் கவர்களை வாங்கி கொண்டு பணம் தராமல் ஏமாற்றியுள்ளனர். இது குறித்து வினித் ஜெலன் கேட்டதற்கு அவரை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார் பினு. இது குறித்து புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வினித் ஜெலன் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து எர்ணாகுளம் மாவட்டம் புத்தன் கூருஸ் பகுதியில் பினு பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவரை பிடிக்க தனிப்படை காவல் துறையினர் கேரளா விரைந்தனர்.
கேரள காவல்துறையின் உதவியோடு சென்று மறைந்து இருந்த பினுவை கைது செய்த அவர்கள், தாங்கள் வந்த காவல்துறை வாகனத்தில் பினுவை அழைத்துச் சென்றனர். அப்போது 2 கார்களில் காவல்துறை வாகனத்தை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் காவல்துறையினரை தாக்கியும், வாகனத்தை அடித்து நெறுக்கியும் பினுவை கூட்டிக் கொண்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் காவல்துறை வாகனத்தின் கண்ணாடி முற்றிலும் சேதமடைந்தது. காயமடைந்த காவலர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து எர்ணாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து புதுச்சேரி மாநில காவல்துறையினரை தாக்கி, தப்பியோடிய பினு மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்