இந்தியா

உ.பி: மசாலாப் பொருட்களில் கழுதைச் சாணம், வைக்கோல் கலப்படம்... ஆய்வில் அதிர்ச்சி!

Sinekadhara

உத்தர பிரதேசத்தில் மசாலாப்பொருட்கள் உற்பத்தி ஆலையில் பல போலி பொருட்கள் கலப்படம் செய்யப்படுவது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் உள்ள நவிப்பூர் பகுதியில் அனுப் வர்ஷ்னே என்பவர் மசாலாப் பொருட்கள் உற்பத்தி ஆலை வைத்து நடத்திவருகிறார். அங்கு தயாரிக்கப்படும் மசாலாக்களில் கலப்படம் செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அந்த தகவலின்பேரில் போலீஸார் ஆலையில் திடீர் ஆய்வு நடத்தியபோது அங்கு மிளகாய்த் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதையும், அவற்றில் கழுதைச் சாணம், செயற்கை நிறங்கள், வைக்கோல் மற்றும் அமிலங்கள் உட்பட பல போலிப் பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதையும் கண்டறிந்தனர். மேலும் உள்ளூர் பிராண்டுகளும் கலப்படம் செய்யப்படுவதையும் கண்டறிந்தனர்.

உடனே ஆலைக்கு சீல் வைத்து உரிமையாளரை கைதுசெய்த போலீஸார், அங்கிருந்து 27 மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியிருக்கின்றனர். ஆய்வு முடிவுகள் வெளிவந்தவுடன் உரிமையாளரின்மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்குக் கொடுத்த தகவலில் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் அங்கிருந்து 300 கிலோ போலி மசாலாப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.