நடிகர் தர்ஷன் எக்ஸ் தளம்
இந்தியா

நடிகர் தர்ஷன் ஜாமீனுக்கு எதிர்ப்பு.. மேல்முறையீடு செய்ய போலீசார் முடிவு!

நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அம்மாநில காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Prakash J

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன், முதுகு வலியால் அவதிப்பட்ட சூழ்நிலையில், அறுவைசிகிச்சை செய்துகொள்ள ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து, அக்டோபர் 30 அன்று கர்நாடக உயர்நீதிமன்றம், அவருக்கு கடுமையான நிபந்தனைகளுடன் ஆறு வாரங்கள் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

darshan

இதற்கிடையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நிரந்தர ஜாமீன் கோரி தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீது விசாரணை நடத்தப்பட்டு கடந்த டிசம்பர் 13ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அப்போது, நடிகர் தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவ்வழக்கில் சிலருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அம்மாநில காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அத்துடன் முதுகுவலியால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தர்ஷன், மைசூரு பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இவர்களது ஜாமீனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.