பாலியல் வன்கொடுமையிலிருந்து தற்காத்துக்கொள்ள இளம்பெண்ணால் ஆணுறுப்பு அறுக்கப்பட்ட கேரள சாமியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த கங்கேசானந்த தீர்த்தப்பதா என்ற ஹரிசுவாமி, பெட்டா என்ற நகரில் உள்ள பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வீட்டில் ஆறு ஆண்டுகளாக பூஜை நடத்தி வந்துள்ளார். அப்போது, அந்த நபரின் மகளை, 12ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. தற்போது கல்லூரியில் படிக்கும் அந்த 23 வயது பெண்ணிடம், கடந்த வெள்ளிக் கிழமை இரவும் பூஜையின் போது அத்தகைய செயலில் ஈடுபட சாமியார் முயன்றபோது, அதை எதிர்த்து கடுமையாக போராடிய அந்த இளம் பெண், இறுதியில் ஹரிசுவாமியின் ஆணுறுப்பை கத்தியால் துண்டித்துள்ளார். பாலியல் வன்கொடுமையை எதிர்த்து துணிச்சலாக செயல்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு, அந்த பெண்ணை பலரும் புகழ்ந்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாமியார் ஹரிசுவாமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு உதவாத ஒன்று எதற்கு என்று கூறி, தனது அந்தரங்க உறுப்பை தானே துண்டித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். பாலியல் வன்செயலில் ஈடுபட முனைவோருக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும், பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள இதுபோன்ற துணிச்சலான செயல் வரவேற்கப்பட வேண்டியது என்றும், சமூக வலைதளங்களில் அந்த பெண்ணின் துணிகரச் செயலுக்கு ஆதரவு குவிகிறது. இதனிடையே, சிறுமியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவோருக்கு தண்டனை வழங்க வகை செய்யும் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.