இந்தியா

"மோடி பேசியது தவறாகப் பரப்பப்படுகிறது" - பிரதமர் அலுவலகம் விளக்கம் !

jagadeesh

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது தவறாகப் பரப்பப்படுகிறது என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் சீன விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப் பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, நேற்று பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், “ஒரு அங்குலத்தைக்கூடச் சீனா கைப்பற்றவில்லை. இந்தியாவிற்குள் சீனப் படைகள் ஊடுருவவில்லை. ஊடுருவ முயன்றவர்களுக்குத் தக்கப்பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நமது ஆயுதப் படைகள் மேற்கொள்ளும். ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது. நமது ராணுவ வீரர்கள் மீது நம்பிக்கை உள்ளது. முழு நாடும் அவர்களுடன் இருப்பதாக எங்கள் வீரர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். எல்லைப் பகுதியில் புதியதாகப் பல கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பிரதமரின் இந்தப் பேச்சு குறித்து ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு இப்போது பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது அதில் "அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் நேற்று தெரிவித்த கருத்து தொடர்பாக சில தவறான தகவல் பரப்புகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி உட்புக முயன்றால் இந்தியா பதிலடி கொடுக்கும், சீனாவின் முயற்சி பாதுகாப்புப் படையினரின் துணிச்சலான செயலால் முறியடிக்கப்பட்டது என்றே பிரதமர் குறிப்பிட்டார்" எனக் கூறப்பட்டுள்ளது.