இந்தியா

‘வங்கியில் 80 லட்சம்.. ஆனால் சிகிச்சைக்கு சல்லிக்காசு இல்லை’ - முதியவர் உயிரிழப்பு   

webteam

வங்கி சேமிப்பில் 80 லட்சம் இருந்தும் அதனை எடுத்து உரிய நேரத்தில் சிக்கிச்சை அளிக்க முடியாததால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மும்பையிலுள்ள பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி பண மோசடி சர்ச்சையில் சிக்கி உள்ளது. ஆகவே அதில் பணம் போட்டவர்கள் தங்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சதில் போராடி வருகின்றனர். இந்நிலையில் 80 வயது முதியவர் முரளிதர் தரா வங்கியில் சேமித்து வைத்த பணத்தை எடுக்க முடியாததால் உரிய நேரத்தில் சிக்கிச்சை எடுக்க முடியாமல் உயிரிழந்துள்ளதாக ‘இந்தியா டுடே’ வெளியிட்டுள்ள செய்தி மூலம் தெரிய வந்துள்ளது. 

இவர் மும்பையிலுள்ள பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் 80 லட்சம் வரை போட்டு வைத்துள்ளார். இவருக்கு சில மாதங்களாகவே இதயநோய் சார்ந்த பிரச்னை இருந்துள்ளது. சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சிகிச்சை நடைபெறாததால் இந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அவரது மகன் பிரேம் தரா, “ எங்க அப்பா 80 லட்சம் வரை இந்த வங்கியில் பணம் போட்டிருந்தார். இவருக்கு சில காலமாகவே இதயக் கோளாறு இருந்தது. அதற்காக சிகிச்சையையும் அவர் எடுத்து வந்தார்.  இறுதியில் மருத்துவர்கள் பை பாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். ஆகவே வங்கியில் இருந்த பணத்தை எடுத்து சிகிச்சை செய்ய தீர்மானித்தோம். ஆனால் வங்கி சில காலமாக மோசடி புகாரில் சிக்கி உள்ளதால் தக்க சமயத்தில் எங்களால் பணத்தை எடுத்து அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் போய் விட்டது. அதனால் எனது தந்தை உயிரிழந்து விட்டார்” என்று கூறியுள்ளார். 

இதேபோல் இரு தினங்களுக்கு முன்னால் 51 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இவர் 90 லட்சம் வரை இந்த வங்கியில் டெபாசிட் செய்திருந்ததாக தெரிய வந்துள்ளது. கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி இன்னொரு வாடிக்கையாளர் இந்த வங்கியின் முன்பாக தற்கொலை மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.  தற்கொலைக்கு முயன்றவர் நிவேதிதா என்பதும் அவர் ஒரு மருத்துவர் என்பதும் இவருக்கு 39 வயது எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.