pm modi
pm modi pt web
இந்தியா

“UPA இறந்து புதைக்கப்பட்டுவிட்டது; பாகிஸ்தான் சொல்வதையே காங். நம்பும்” - மக்களவையில் பிரதமர் பேச்சு!

PT WEB

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக எதிர்கட்சிகள் தெரிவித்தன. இத்தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டாம் நாள் விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார்.

PMModi NoConfidenceMotion

மூன்றாம் நாளான இன்று பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கி வருகிறார்.

அதில், ”கடந்த மூன்று நாட்களாக எதிர்க்கட்சிகள் என்னை மிக மோசமாக விமர்சித்தார்கள். விமர்சனம் செய்வதில் மிகக் கீழான நிலையை அடைந்திருக்கிறார்கள். என்னை அவதூறாக பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு டானிக் குடிப்பது போல இருக்கிறது. எதிர்க்கட்சிகளுடைய வசை மொழிகளை நான் வாழ்த்துக்களாக எடுத்துக் கொள்கிறேன். எ

திர்க்கட்சிகளுக்கு ஒரு ரகசிய சக்தி உள்ளது. அவர்கள் யாரை திட்டுகிறார்களோ, அவர்கள் மிகப் பெரிய அளவில் வளர்ந்து விடுவார்கள். இந்திய பொதுத்துறை வங்கிகள் தங்களது லாபத்தை இரண்டு மடங்காக ஆக்கி இருக்கிறது. ஆனால் அவற்றை மறைத்து விட்டு இந்திய வங்கித் துறைகள் நஷ்டத்தில் இயங்குவதாக பொய் கூறுகிறார்கள். கடந்த இருபது வருடங்களாக என்னை அவமானமாக பேசுவது தான் எதிர்க்கட்சிகள் உடைய வேலையாக இருந்திருக்கிறது.

ஹெச் ஏ எல் நிறுவனம் முடிந்து விட்டது என சொன்னார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் உடைய அந்த ரகசிய சக்தி மீண்டும் வேலை செய்தது. ஹெச் ஏ எல் நிறுவனம் எப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எல் ஐ சி குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தார்கள். மீண்டும் அவர்களது ரகசிய சக்தி வேலை செய்து எல்ஐசி மிகச் சிறப்பாக செயல்படுகிறது.

எனது மூன்றாவது முறை ஆட்சியின்போது இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கும்.

pm modi

எந்த இலக்கும் கிடையாது, நாட்டை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற எந்த திட்டமும் கிடையாது, அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் என தெரியாது. ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் எங்களை எதிர்க்க ஒன்று சேர்ந்திருக்கிறதாக கூறுகிறார்கள்.

கடந்த 70 வருடங்களாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி உறக்கத்திலிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு கடின உழைப்பின் மீது நம்பிக்கை கிடையாது. தொலைதூரப் பார்வை கொண்ட தலைவர்கள் கிடையாது. சீர்திருத்தங்களை சிந்திக்க வேண்டும். அதனை செயல்படுத்த வேண்டும். அதுதான் எங்களது தாரக மந்திரம். எதிர்க்கட்சிகள் 2028 ஆம் ஆண்டும் எங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவார்கள்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கொண்டு வந்த போது இந்திய மக்களுக்கு அலைபேசிகளை எப்படி பயன்படுத்துவது என கூட தெரியாது, அவர்களுக்கு படிப்பறிவு கிடையாது, இதெல்லாம் செயல்படாது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இன்று டிஜிட்டல் இந்தியா திட்டம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடவடிக்கை எடுத்தபோது கூட காங்கிரஸ் அதில் மோசமான அரசியலை செய்தார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்ததில்லை. பாகிஸ்தான் என்ன சொல்லுமோ அதைத்தான் காங்கிரஸ் நம்பும்.

வறுமை

1964 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசம் குஜராத் பீகார் ஆகிய மாநிலங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்களுக்கு மக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்து வருகிறார்கள். திரிபுராவில் 1988 ஆம் ஆண்டில் இருந்து அந்த மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்து வருகிறார்கள். 1995 ஆம் ஆண்டிலிருந்து ஒடிசா மாநிலத்திற்கு மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொடுத்து வருகிறார்கள். 1988 ஆம் ஆண்டிற்கு பிறகு நாகலாந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்து வருகிறார்கள்.

ஆந்திரா டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்து வருகின்றனர். யு பி ஏ கூட்டணி இறந்து புதைக்கப்பட்டு விட்டது. ஆனால் அதை நீங்கள் கொண்டாடுகிறீர்கள். யுபிஏ கூட்டணி இறந்ததற்கான இறுதி அஞ்சலி பெங்களூரு வில் அனுசரிக்கப்பட்டது. ஆனால் அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் செய்திருக்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.