இந்தியா

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!

webteam

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரிசளித்த கடல் நீரைக் குடிநீராக சுத்திகரிக்கும் கருவி பொருத்தப்பட்ட ஜீப் டெல்லி வந்தடைகிறது. 

கடந்த ஆண்டு ஏப்ரலில் இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டபோது, கடல்நீரை சுத்திகரிக்கும் கருவி கொண்ட ஜீப்பை இஸ்ரேல் பிரதமர் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். மத்திய தரைகடலின் கடலோரப் பகுதியில் நீரைக் கிழித்தபடி அந்த ஜீப்பில் இரு தலைவர்களும் பயணம் செய்த நிலையில், மோடிக்கு அந்த ஜீப்பை பரிசளிப்பதாக நெதன்யாகு அறிவித்திருந்தார். இப்போது இஸ்ரேல் பிரதமர் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்த ஜீப், நாளைக்குள் டெல்லி வந்தடைகிறது. 

இதையடுத்து குஜராத்தின் புஜ் பகுதியில் கடல் நீரை அந்த ஜீப் குடிநீராக்கும் திட்டத்தை காணொளி மூலம் இருநாட்டு பிரதமர்களும் நாளை தொடங்கி வைக்கவுள்ளனர். 72 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த ஜீப் மூலம், ஒருநாளில் கடல் நீரில் 20 ஆயிரம் லிட்டர் சுத்தமான குடிநீராக மாற்ற முடியும். வெள்ளம், பூகம்பம், வறட்சி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அந்தந்த பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அளிக்க இந்த ஜீப் உதவும் என்றும், இதேபோன்ற கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களை இந்தியா தயாரிக்க வழிகாட்டுதலாக அமையும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.