இந்தியா

ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: நவ.28-ல் தொடங்கி வைக்கிறார் மோடி

rajakannan

ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 28-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

ஐதரபாத்தின் மியபூர் ரயில் நிலையத்தில் இதற்கான தொடக்க விழா நவம்பர் 28-ம் தேதி மதியம் 2.25 மணிக்கு நடைபெற உள்ளது. ரயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர் முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் மற்றும் அதிகாரிகளுடன் மியாபூரில் இருந்து குகட்பள்ளி வரை 5 கிலோமீட்டர் தூரம் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார்.

மறுநாள் நவம்பர் 29-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. ரூ.15 ஆயிரம் கோடி செலவிலான இத்திட்டத்தில் 72 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 30 கிலோமீட்டர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது.

இந்த மெட்ரோ ரயில் சேவை மூலம் இந்த ஆண்டில் நாளொன்றுக்கு 17 லட்சம் பேர் பயணிப்பார்கள் எனவும் 2024ல் 22 லட்சம் பேர் பயணிப்பார்கள் எனவும் ஐதரபாத் மெட்ரோ சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் கூட்டம் அதிகமுள்ள நேரங்களில் 3 அல்லது 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.