கடந்த ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி 23 நாடுகளுக்கு பயணம் செய்துள்ள நிலையில், அதற்கான செலவு குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சர்வதேச இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விதமாக நமது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இவை தவிர, ஜி20 (G20), பிரிக்ஸ் (BRICS), குவாட் (QUAD) மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) போன்ற சர்வதேச அமைப்புகளின் உச்சி மாநாடுகளிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் பிரதமர் மோடியின் பயணச் செலவுகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், “நடப்பாண்டில் மலேசியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி, பிரான்ஸ், ஸ்லோவாக்கியா, சீஷெல்ஸ், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதாகவும் இதற்காக சுமார் 74.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கடந்த ஆண்டு, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஜப்பான், பிரேசில், சவுதி அரேபியா, பூடான், தென்னாப்பிரிக்கா, ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா உட்பட மொத்தம் 23 நாடுகளுக்குப் பயணம் செய்த நிலையில், அதற்காக சுமார் 187 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 முதல் 2026 வரை பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 550 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தப் பயணத்தின்போது, அதாவது ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2025 வரை 300-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகி இருப்பதாகவும், அதன்மூலம் இந்தியா 381.8 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளதாகவும், ஆனால் அந்த மொத்தத் தொகையை குறிப்பிட்ட பயணங்களுடன் தொடர்புபடுத்தவில்லை என்றும் அது தெரிவிக்கப்பட்டுள்ளது.