PM MOdi ANI
இந்தியா

2001-இல் போட்ட சிறு விதை.. 25 வருட பயணம்.. மோடி மிகப்பெரிய அரசியல் தலைவரானது எப்படி?

ஊழல் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் அரசு நற்பெயரை இழந்திருந்த நிலையில், வாக்காளர்களைத் திரட்டக்கூடிய ஒரு சக்திவாய்ந்த தலைவர் பாஜகவுக்கு மிகவும் தேவைப்பட்டார்.

Prakash J

உலகம் கவர்ந்த இந்திய பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, அரசின் தலைமைப் பொறுப்பிற்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, 2001 அக்டோபர் 7 அன்று குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்றார். 2014-இல் தேசிய அரசியலில் நுழைவதற்கு முன்பு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் நீடித்தார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய அவர், தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றிக்கு வழிநடத்தி, இன்றுவரை பிரதமராக பதவியில் உள்ளார். இதன்மூலம் அவருடைய அரசியல் பயணம் வெள்ளிவிழா கண்டுள்ளது.

PM Modi

அவருடைய இந்த அபார வளர்ச்சியின் பின்னணியில் 2001-இல் நிகழ்ந்த புஜ் நிலநடுக்கம் திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறப்படுகிறது. 2001ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று கட்ச் (Kutch) மாவட்டத்தில் புஜ் (Bhuj)நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.6 அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் அப்போதே 13,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். 4,00,000 வீடுகள் முற்றிலும் தரைமட்டமாயின. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, குஜராத்தின் முதல்வராக இருந்தவர் கேசுபாய் பட்டேல். அப்போது இன்றைய பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, பாஜகவின் தேசியப் பொதுச்செயலாளராக டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

நிலநடுக்கத்திற்குப் பிந்தைய உடனடி நிவாரணப் பணிகளைக் கையாண்டதில் கேசுபாய் பட்டேல் அரசு மீது விமர்சனங்களும் மக்கள் அதிருப்தியும் எழுந்தன. இது, பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட மத்திய தலைமைக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, கட்சி மற்றும் நிர்வாகத்தைச் சீரமைக்க பா.ஜ.க தலைமை 2001 அக்டோபர் மாதம் நரேந்திர மோடியைக் குஜராத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கச் செய்தது. முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகே, பாதிக்கப்பட்ட புஜ் மற்றும் கட்ச் பகுதிகளைச் சீரமைத்து புதிய நகரங்களாக மறுகட்டமைப்பு செய்யும் பிரம்மாண்டமான பணிகளை நரேந்திர மோடி தீவிரமாக முன்னெடுத்தார்.

PM Modi

நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அந்த மறுகட்டமைப்புப் பணிகளில் அவர் காட்டிய நிர்வாகத் திறமையும், அதைத் தொடர்ந்து குஜராத்தில் அவர் நடைமுறைப்படுத்திய பொருளாதார-வளர்ச்சி மாதிரியும்தான் அவருக்கு அம்மாநிலத்தில் தொடர் வெற்றிகளைப் பெற்றுத் தந்தது. மேலும், அடுத்து வரவிருந்த 2002 குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியின் பிம்பத்தைச் சீரமைக்கவும், ஆட்சிக்கு எதிரான அலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பா.ஜ.க மத்திய தலைமை விரும்பியது. அந்த தேர்தலிலும் வெற்றிபெற்று குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்த அவர், 2012 மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது தேசிய அளவிலான லட்சியங்களை வெளிப்படுத்தத் தொடங்கினார். ஊழல் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் அரசு நற்பெயரை இழந்திருந்த நிலையில், வாக்காளர்களைத் திரட்டக்கூடிய ஒரு சக்திவாய்ந்த தலைவர் பாஜகவுக்கு மிகவும் தேவைப்பட்டார். அதுவே, பின்னாளில் 2014-ல் தேசிய அளவில் 'மோடி அலை' உருவாகி அவர் பிரதமராவதற்கு முக்கியப் பாதையாக அமைந்தது.