இந்தியா

ராமர் பாலத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்றால் 2024ல் மோடி பிரதமராக மாட்டார் - சுப்ரமணிய சுவாமி

ச. முத்துகிருஷ்ணன்

ராமர் பாலத்திற்கு ஆதரவாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்றால் 2024 ஆண்டு மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ராமர் பாலத்தை இந்தியாவின் பண்டைய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று நீதிபதி சந்திரசூட் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சுப்ரமணிய நேரில் ஆஜராகி ராமர் பாலத்தில் எந்த கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படக் கூடாது என வாதிட்டார்.

“இது கொள்கை முடிவு, மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் முடிவு எடுக்கட்டுமே?” என்று நீதிபதி சந்திரசூட் தெரிவிக்க, “மத்திய அரசு எனது மனுவுக்கு எதிர் மனு தாக்கல் செய்யட்டும்” என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார். இதையடுத்து ராமர் பாலம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, “ராம் சேதுவை பண்டைய பாரம்பரிய நினைவுச்சின்னமாக ஆம் அல்லது இல்லை என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆம் என்றால் அது எனக்கு வெற்றி. இல்லை என்றால், அது 2024ல் மோடியின் தோல்வி.” என்று குறிப்பிட்டுள்ளார்.