இந்தியா

விதவை தொடர்பான பிரதமர் மோடியின் சர்ச்சை கருத்து.. வலுக்கிறது எதிர்ப்பு..!

Rasus

விதவை பென்சன் தொடர்பாக பேசிய பிரதமர் மோடியின் கருத்துக்கு கிட்டத்தட்ட 1 வாரத்திற்கு பின் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. சோனியா காந்தியை அவர் மறைமுகமாக சாடியதாவும் பலர் தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு நாளையே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. முன்னதாக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ராஜஸ்தானில் கடந்த வாரம் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். காங்கிரஸ் ஆட்சியில் விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டினார். அத்துடன் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் விதவை ஒருவரின் வங்கிக் கணக்கில் தொடர்ச்சியாக பணம் வந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு சற்று தாமதாகவே தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் பேசி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. சோனியா காந்தியை மறைமுகமாக விதவை என்று பிரதமர் மோடி தாக்கியதாகவும் சர்ச்சை நிலவுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள கர்நாடாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, பிரதமர் மோடி தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பதாக கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு ஒட்டுமொத்த பெண்கள் சமுதாயத்தையும் பிரதமர் மோடி காயப்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து பிரதமர் மோடி கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுதவிரவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், பெண்கள் என பலரும் பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிரான தங்களது கண்டனக் குரல்களை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று பிறந்த நாள் கொண்டாடிய சோனியா காந்திக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தேர்தல் பரப்ரையில் காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தியையும் கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி நேற்று சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.