இந்தியா

நாடாளுமன்றத்திற்கு பிரதமர் அணிந்துவந்த நீலநிற ஜாக்கெட் ஸ்பெஷலானது - ஏன் தெரியுமா?

சங்கீதா

பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்திற்கு அணிந்துவந்த நீலநிற ஜாக்கெட் ,மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் (PET) பாட்டில்களால் ஆனது என்பதால் சிறப்பு கவனம் பெற்று வருகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் நமக்கு மட்டுமின்றி இயற்கைக்கும் மிகவும் ஆபத்தானது என அறியப்பட்டாலும், அதை நாம் நிறுத்த முயலுவதில்லை. இந்தநிலையில், நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து உடை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், குளிர்பானம், மினரல் உள்ளிட்ட பெட் (PET) பாட்டில்களை மறுசுழற்சி செய்து, ஆடைகளை உருவாக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, 10 கோடிக்கும் மேற்பட்ட பெட் பாட்டில்களை மறுசுழற்சி செய்து ஆடைகளை தயாரித்து, தனது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும், ஆயுதப்படை வீரர்களுக்கும் அளிக்க முயற்சி எடுத்துள்ளது. இதற்கு முன்னோடியாக பெங்களூருவில் நடந்த இந்திய எரிசக்தி வார விழாவில், பிரதமர் மோடிக்கு, மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் (PET) பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட நீலநிற ஜாக்கெட்டை, இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சேர்மன் பரிசாக வழங்கினார்.

இதைதான் இன்று நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி அணிந்து வந்து, தனிக் கவனத்தை ஈர்த்ததுடன், பட்ஜெட் தாக்கலின் போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.