கச்சத்தீவு
கச்சத்தீவு முகநூல்
இந்தியா

கச்சத்தீவு பிரச்னை | “திசைதிருப்பல்களில் ஈடுபடாதீர்கள் பிரதமர் அவர்களே” முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

ஜெனிட்டா ரோஸ்லின்

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், “இந்திரா காந்தி ஆட்சி காலத்தில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது” என பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது புறம் இருக்க, “எல்லைப் பகுதிகளுக்கு ஈடாக பங்களாதேஷுடன் இதேபோன்ற 'நட்பு சைகையை' மோடி அரசாங்கமும் மேற்கொண்டது. கச்சத்தீவை மீட்போம் என இன்று கூறிவரும் பிரதமர் மோடி பத்து ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, செல்வப்பெருந்தகை போன்றவர்கள் பதிலுக்கு பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது சமூக வலைதளப்பக்கத்தில் இவ்விவகாரத்தில் திமுகவை விமர்சித்து பதிவு ஒன்றினை இன்று காலை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர், “தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு குறித்து வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அம்பலமாகிவிட்டன. காங்கிரஸும் திமுகவும் குடும்ப கட்சிகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே கவலைப்படுகிறார்கள்.

அவர்கள் வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தற்போது எதிர்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே...” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் - முதல்வர் இடையேயான இந்த வார்த்தை மோதல்கள், அரசியல் பரபரப்பை தீவிரப்படுத்தியுள்ளது.