மீரா மாஞ்சி, மோடி
மீரா மாஞ்சி, மோடி ட்விட்டர்
இந்தியா

உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளி... மீரா மாஞ்சி வீட்டில் தேநீர் அருந்திய பிரதமர் மோடி

Prakash J

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, ராமர் பிறந்த இடம் என நம்பப்படும் அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிந்து அடுத்த வருடம் ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இறுதிக்கட்ட பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. தவிர, இதற்கான விரிவான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேகம் மற்றும் அதனைத்தொடர்ந்து அயோத்திக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதால், 1,450 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

மேலும், 240 கோடி ரூபாய் மதிப்பில் ரயில் நிலையமும் மேம்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம், இன்று அயோத்தி சென்ற பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

பின்னர், நரேந்திர மோடி, அயோத்தியில் உள்ள மீரா மாஞ்சி என்பவரின் வீட்டுக்குச் சென்றார். அங்கே அவரது வீட்டில் தேநீர் அருந்தி மீரா மாஞ்சியை ஆச்சர்யப்படுத்தினார். மீரா மாஞ்சி அயோத்தியில் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள அவருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மீரா மாஞ்சி வீட்டில் பிரதமர் தேநீர் அருந்திய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிரதமர் மோடி மீரா மாஞ்சியின் இல்லத்துக்குச் சென்றதையும், அங்கே அவர் தேநீர் அருந்திய வீடியோவையும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ’பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளிதான் இந்த மீரா’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் வருகை குறித்து மீரா மாஞ்சி , “பிரதமர் என் வீட்டுக்கு வருவார் என்பது தெரியாது. அவர் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதன் என்னிடம் தகவல் தெரிவித்தனர். அவர் வந்தபின்னர்தான் எனக்கு இந்த விஷயமே தெரிந்தது. அவர் என்னிடமும் எனது குடும்ப உறுப்பினரிடமும் பேசினார். உஜ்வாலா திட்டத்தால் நான் பெற்ற பலன்கள் குறித்து கேட்டறிந்தார். ’நான் என்ன சமைத்தேன்’ என்று வினவினார். நான் சாதமும், பருப்பும், காய்கறிகளும் சமைத்திருப்பதாகச் சொன்னேன். அவர் எங்கள் வீட்டில் தேநீர் அருந்தினார். தேநீரில் சர்க்கரை சற்று அதிகமாக இருப்பதாகக் கூறினார். ’எப்போதுமே இனிப்பு சற்று தூக்கலாக இடுவதே என் வழக்கம்’ என்று கூறினேன்” என்றார்.

நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயுவை மத்திய அரசு வழங்கும் திட்டத்தின் பெயரே உஜ்வாலா யோஜனா. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற்ற 10 கோடியாவது பெண்தான் மீரா மாஞ்சி.