இந்தியா

‘Amphan’ புயல் பாதிப்புகளை நாளை பார்வையிடும் பிரதமர்

webteam

மேற்கு வங்கத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள ‘Amphan' புயல் பாதிப்புகளைப் பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார்.

வங்கக்கடலில் உருவான 'Amphan' புயல் நேற்று மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் மேற்கு வங்க மாநிலம் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது. அங்கு லட்சக் கணக்கான மக்கள் புயலால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 70க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

இந்தப் புயல் ரூபாய் ஒரு லட்சம் கோடி மதிப்பிற்குச் சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என மேற்கு வங்க அரசு கணித்துள்ளது. ஆனால் சேதத்தின் மதிப்பை முழுமையாகக் கணக்கிட இன்னும் சில நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கொல்கத்தா. மேற்கு மித்னாபூர், கிழக்கு மித்னாபூர், புருலி பங்குரா ஆகிய பகுதிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை நாளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார் எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலம், ஆகாய மார்க்கமாக அவர் பார்வையிடுவார் எனத் தெரிகிறது. மேலும், புயலால் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் மோடி காண்பார் எனக் கூறப்படுகிறது.